மனிதர்கள் ஊதியத்திற்காக செய்யும் தொழில்களில் மிகமிக இழிவானது மனிதர்கள் கழிக்கும் மலத்தை வெறும் பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு துப்புரவு செய்யும் தொழில்தான். இந்தக் கொடுமை சனாத னத்தின் விளைவான சாதியை அடிப்படையாகக் கொண்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சாதியை அடிப் படையாகக் கொண்ட இந்தியாவில், இன்றும் கூட சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட பல இலட்சம் மனிதர்கள் இந்த இழிதொழிலைச் செய்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தத் தொழிலை செய்துதான், தாங்கள் பிழைக்க முடியும் என்று நம்பும் அவலம். வருணாசிரம சாதியக் கட்டமைப்புக்கு வெளியே, சாதி யற்றவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஒதுக்கப்பட்ட சில கடைநிலை சமூகத்தினர் மீது இந்த இழிதொழில் திட்டமிட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தத் தொழில் செய்வோர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்களை சக்கிலி, மாதாரி, பகடை, தோட்டி என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். இங்கு துப்புரவுப் பணி செய்பவர்க ளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் அவர்களா கவே இருக்கின்றனர்.
திமுக அரசு “மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013”-ஐ மாநில விதிகளில் சுட்டிக்காட்டியுள்ளவாறு, முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதற்கான நிதியை தாராளமாக ஒதுக்க வேண்டும்.